Tuesday, January 10, 2006

சிகரெட் விளம்பரம்: மன்னிப்பு கேட்டார் அமிதாப்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் புகைப்பிடிப்பது போன்ற புகைப்படத்துடன் ஒரு டிஜிட்டல் பேனர் விளம்பரம் கோவா தலைநகர் பனாஜி நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக சிகரெட் பிடிப்பதற்கு எதிரான அமைப்பு ஒன்று அமிதாப்புக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதையடுத்து அந்த அமைப்பிடம் அவர் மன்னிப்பு கேட்டார்.
அந்த அமைப்புக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நான் 'பேஃமிலி' என்னும் இந்தி திரைப்படத்தில் மும்பை தாதாவாக நடித்திருந்தேன். அதில் புகைப்பிடிப்பது போன்ற காட்சி வரும். அதிலிருந்து ஒரு புகைப்படத்தை அந்த விளம்பரத்தில் பயன்படுத்தியுள்ளனர்.
ஆன்கர் எலக்ட்ரிக் ஸ்விட்ச் கம்பெனி அந்த விளம்பர பேனரை நிறுவியுள்ளது. நான் புகைப்பிடிப்பதையும் ஆதரிக்கவில்லை. ஆன்கர் நிறுவனத்தையும் விளம்பரப்படுத்தவில்லை. எனக்கும் அந்த விளம்பரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
அந்த விளம்பரம், மக்களையும் சிகரெட் எதிர்ப்பு அமைப்புகளையும் புண்படுத்தியிருந்தால் அதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.
இக்கடிதத்தை பனாஜியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சிகரெட் ஒழிப்பிற்கான தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் சேகர் சால்கர் வெளியிட்டார்.

நன்றி: தினமணி

No comments: