"ஹதயோகி' ஜி.டி.அன்பரசன்
போஜன வாயில் போடுகின்ற உணவு நல்லதாகவும், முறையாகவும் இருந்தால் ஆசனவாயில் வருகின்ற அநேக வியாதிகளைத் தடுக்கலாம்.
உடலின் கழிவு மண்டலத்தில் உணவின் மாறுபாட்டால் பல்வேறு சிக்கல்கள் உண்டாகி அதுவே மலச்சிக்கலாக மாறுகிறது.
மலம் சரியாக வெளியேற்ற முடியாமல் அடிவயிற்றில் அழுத்தத்தோடு முக்கி மலத்தை வெளித்தள்ள முயற்சி செய்வதாலும், அடிவயிற்றில் அதிக உஷ்ணம் தங்கிவிடுவதாலும், மூலாதாரப்பகுதி சூடாகி மூலநோயை ஏற்படுத்துகிறது.
இரத்தம் சேர்ந்து மலம் வெளிவந்தால் இரத்தமூலம், ஆசன வாயின் உள்தசை வெளியே வந்தால் வெளிமூலம், மலத்துவாரத்தினுள் இரணமாகி எரிச்சலும், புண்ணும் ஆகிவிட்டால் அது உள்மூலம் என பலவகை மூல நோய்கள் உள்ளன. இவை அனைத்துக்கும் அடிப்படை காரணம் மலச்சிக்கல் தான்.
மலச்சிக்கல் -மூலநோய் -காரணம்: பரோட்டா, பூரி, சப்பாத்தி, நூடுல்ஸ் போன்ற மாவுப் பொருள்களான உணவுகளை அதிகமாக வாரம் முழுவதும் உண்பதும், அசைவ உணவு, ஃபாஸ்ட் ஃபுட் போன்றவைகளை சுவைக்காக விரும்பி உண்பதாலும், ஜீரண உறுப்புகளுக்கு அதிக வேலைப்பளு ஏற்பட்டு, வெப்பம் அதிகமாகி மலம் இறுகுகிறது.
எளிதில் ஜீரணமாகக்கூடிய பச்சைக் காய்கறிகள், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதால் மலச்சிக்கல் வருகிறது. மேலும், ஒரே இடத்தில் பலமணி நேரம் அமர்ந்திருப்பதாலும், நைலான், பாலியெஸ்டர் உள்ளாடைகளை அணிவதாலும், காற்றோட்டமில்லாத இடத்தில் வசிப்பதாலும் அடிவயிறு அதிக வெப்பமடைகிறது.
பேக்கரி பொருள்கள் மலச்சிக்கலை ஏற்படுத்தும் தன்மையுள்ளவை. இரவில் அதிக நேரம் கண்விழிப்பதும், போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும், உணவை நன்கு வாயில் அரைத்து உமிழ்நீருடன் கலந்துண்ணாமல் இருப்பதும் மலச்சிக்கலுக்கு ஒரு காரணம்.
மலச்சிக்கல் தொடர்ந்து இருந்தால் மனதுள் அதிக சிக்கல்கள் வரும். ஜீரண உறுப்புகளாகிய இரைப்பை, கல்லீரல், கணையம், பித்தப்பை, சிறுகுடல் போன்றவற்றிலிருந்து சுரக்கும் செரிமான திரவநீர் சரியாக சுரக்கவில்லையென்றாலும் மலச்சிக்கல் உண்டாகும்.
ஒரு நாளில் உண்ணும் உணவின் மொத்தப்பங்கில் நான்கில் ஒரு பங்கு கழிவு பொருளான மலமாக வெளியே வரவேண்டும். உண்பது மட்டும் அதிகமாக இருந்து அதன் கழிவு வெளியேறாமல் இருந்தால் அவை மலக்குடலில் சேர்ந்து இறுக்கமாகி நோய்க்கிருமிகளை உண்டாக்கும். இதன் விளைவாக பசியின்மை, தலைவலி, குடல்வால்வு நோய், கண்ணோய்கள், குடல் புற்று, மன அழுத்தம், வயிற்றுவலி, மாதவிடாய் கோளாறு போன்ற நோய்களைத் தோற்றுவிக்கும்.
நாள்பட்ட மலம் குடலுக்குள் இருக்கும் போது அதில் நச்சுத்தன்மை ஏற்பட்டு இரத்தத்தோடு கலந்து தோல் நோய்களை உண்டாக்கும். மது அருந்துதல், போதைப் பாக்கு, புகைப்பிடித்தல் இவைகளாலும் ஜீரண உறுப்புகள் பாதிக்கப்பட்டு மலச்சிக்கல் மூலநோய் உருவாகிறது.
மலச்சிக்கல் -மூலநோயை முற்றிலும் தடுக்க...: உணவில் நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காரட், பயறு வகைகள், ஓட்ஸ், பார்லி, ஆப்பிள், அத்திப்பழம் போன்றவைகளை தினசிரி சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவில் 75 சதவீத அளவு காய்கறி, கீரைவகைகள், பழங்களையும், 25 சதவீதம் தானிய வகைகளையும் சேர்க்க வேண்டும். உணவு உண்ணும் போது தேவையான அளவு நீரை அருந்துங்கள்.
தினசரி சரியான நேரத்தில் மலம் கழிக்க பழக வேண்டும். மலச்சிக்கல் உள்ளவர்கள் இளம் சூடான நீரை காலையில் வெறும் வயிற்றில் சுமார் 250 மில்லி அளவு அருந்தி விட்டு, சுமார் இருபது நிமிடங்களுக்குப் பின் வயிற்றின் அடியில் அழுத்தத்தை மலத்தூண்டல்களை ஏற்படுத்தும் சாசாங்க வணக்க ஆசனம், பாம்பு ஆசனம், அபான வாயு நிவர்த்தி ஆசனம், வெட்டுக்கிளி ஆசனம் ஆகிய எளிய யோகாசனப் பயிற்சிகளை சில நிமிடங்கள் செய்தால் மலச்சிக்கல் தீரும்.
யோகக் கிரியாவிலுள்ள "பஸ்தி' என்னும் மலக்குடல் சுத்தி பயிற்சியை வாரம் ஒரு முறை செய்யலாம். (பஸ்தி -ஆசன வாய் வழியாக குளிர்ந்த நீரை செலுத்தி இறுகிய மலத்தை இளக வைத்து வெளியேற்றும் முறை).
இரவில் படுப்பதற்கு முன்னர் சுத்தமான விளக்கெண்ணெயுடன், பிஞ்சு கடுக்காய் தூளை ஒரு டீஸ்பூன் அளவு சேர்த்து குழைத்து உண்டால் காலையில் மலம் இளகி வரும். மூலச்சூடும் குறையும். வட்டமான பாத்திரத்தில் இடுப்பும், அடி வயிறும் படும்படி 10 நிமிடம் குளிர்ந்த நீரில் இருந்தால் சூடு குறையும்.
மலச்சிக்கல் -மூலநோயை முற்றிலும் தடுக்க: தினசரி உகந்த உணவு, எளிய யோகாசனப் பயிற்சி, போதுமான அளவு தூக்கம், மன அழுத்தம் மற்றும் கவலை இன்மை, சரியான நேரத்தில் மலம் கழித்தல் போன்றவற்றாலும் தடுக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment